கொத்தவரை

கொத்தவரை

இந்தியாவில் கொத்தவரை சாகுபடி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக விளங்கிவருகிறது. குவார் எனப்படும் இந்த கொத்தவரை காய்கறி வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக இந்த கொத்தவரையில் இருந்து கிடைக்கும் ஒரு வகைப் பொருள் எரிவாயு எடுக்க மற்றும் உணவுக்கும் பயன்படுத்தப் படுகிறது. ராஜஸ்தானில் கொத்தவரைக்கு என சந்தை உள்ளது. கொத்தவரை சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொத்தவரை சாகுபடி தற்போது சேலம், கடலூர், திருவண்ணாமலை, ஈரோடு, விருதுநகர், திருச்சி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபலமடைந்து வருகிறது.

கொத்தவரங்காய் சுவையான ஓர் உணவு என்பதை நாம் அறிவோம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். கொத்தவரைக் காய்க்கு சீனியவரை என்றொரு பெயரும் உண்டு. தினமும் உணவோடு கொத்தவரை பசையை சேர்த்து உண்டு வந்ததால் முதல்நிலை சர்க்கரை நோயாளிகள் தமது உணவுக்குப் பின் எடுத்த ரத்த சோதனையில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்து வந்ததை ஓர் ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

கொத்தவரையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. மேலும் சீரண உறுப்புகள் சீராக இயங்கவும் சீரணப் பாதையை சுத்தம் செய்யவும் இந்த நார்ச்சத்து மிகவும் உபயோகமாக உள்ளது. கொத்தவரையில் பொதிந்து விளங்கும் மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு நல்ல எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்குத் துணை செய்கிறது. அதிக உடல் எடை உள்ளவர்கள் மற்றும் உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு சில பவுண்டுகளாகிலும் உடல் எடையைக் குறைக்கும் வகையில் உதவி புரிவதாக விளங்குகிறது.

கொத்தவரையில் அபரிமிதமான விட்டமின் சத்தும், விட்டமின் சிசத்தும், விட்டமின் கேமற்றும் போலேட்ஸ்ஆகியன அடங்கியுள்ளன. இவை அத்தனையும் உடல் நலத்துக்கான பல்வேறு மருத்துவ குணங்களைப் பெற்று விளங்குகின்றன. இதில் விட்டமின் சிசத்து மிகுதியாக உள்ளதால் பற்களையும் எலும்புகளையும் பலமுடையதாகச் செய்யத் துணை புரிகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் கேசத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் உதித்து வளர்ந்து வரும் கரு சீராகவும் வலுவாகவும் வளர வகை செய்கிறது.

கொத்தவரை மலச்சிக்கலைத் தீர்க்க உதவுகிறது. மேலும் பேதியை நிறுத்தவும், வயிற்றுப் போக்கைத் தடுக்கவும், ஐ.பி.எஸ். என்று ஆங்கிலத்தில் குறிக்கப் பெறும் நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகியவற்றைக் குறைக்க உதவி செய்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் தடுத்து உதவுகிறது.
கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க உதவுகிறது. மேலும் கொத்தவரைச் செடி பசி அடக்கியாகவும், வலி நிவாரணியாகவும், நுண்கிருமி நாசினியாகவும், வீக்கம் கரைச்சியாகவும், வற்றச் செய்யும் குணமுடையதாகவும், வயிற்றுப் புழுக் கொல்லியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டு வலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும், புண்களை ஆற்றியாகவும், நீர்ப் பெருக்கியாகவும், கோழைக் கரைச்சியாகவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும், சுரப்பிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும் தன்மைகளைப் பெற்றுள்ளன

கொத்தவரை விதையில் இருந்து கிடைக்கும் ஒருவகை கோந்துப் பொருளினால் காய்கறிப் பயிர் என்ற நிலையிலிருந்து வணிகப் பயிர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.

கொத்தவரை என்பது கொத்தாக காய்கள் உள்ள ஓரளவு வறட்சியைத் தாங்கி வளரும் செடியாகும். இது சுமார் 2 – 3 மீட்டர் உயரம் வளரும். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகியவை இதன் தாயகம் ஆகும். இன்று இதன் ஏற்றுமதி வணிக முக்கியதுவத்தால் பல தொழில் வள நாடுகளையும் தன்பால் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் விதையைப் பொடியாக்கி தண்ணீரில் கலந்தால் ஒரு வகை கோந்து உருவாகிறது. கேலக்டோமேனன் என்ற பொருள்தான் இதன் கோந்து தன்மைக்கு காரணம் ஆகும்.

இந்த கோந்து மருந்துப் பொருட்கள், பேப்பர், டெக்ஸ்டைல்ஸ், டூத்பேஸ்ட், ஐஸ்கிரீம், பீஸ்சா, லிப்ஸ்டிக் போன்ற பல பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.
வெப்பமண்டலக் காடுகளில் இப்பயிர் நன்றாக வளரும். இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா நாடுகளில் அதிகம் பயிராகிறது. உலகின் மொத்த கொத்தவரை ஜெல் தேவையில் 80% இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகிறது. இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்ரா ஆகிய மாநிலங்கிளல் கொத்தவரை வணிகரீதியாக அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

கொத்தவரை விதை மாவு துணிகளுக்கு மிருதுத்தன்மையும், பளபளப்பையும் கொடுக்கிறது. எனவே, இது ஜவுளி உற்பத்தியில் முக்கியப் பங்குவகிக்கிறது. கொத்தவரை திரவ மருந்துகளை கெட்டியான டானிக்காகவும் சிரப்பாகவும் மாற்றுவதற்கும், தூள்வடிவ மருந்துகளை மாத்திரைகளாகச் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கான லிப்ஸ்டிக், முகப்பூச்சு கிரீம் தயாரிப்பிலும் இந்த கொத்தவரைப் பிசின் தற்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான பொருள் என்பதால் அலர்ஜி போன்ற தொந்தரவுகள் இல்லை.

கொத்தவரை விதையில் 75% முழுமையான தண்ணீரில் கரையக்கூடிய நார்சத்து நிரம்பியுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும். இதனை உண்ணும் போது வயிறு நிரம்பிய உணர்வு விரைவில் வந்துவிடுவதால் அதிகமாக உண்ணமுடியாது. மேலும் உண்ட உணவு சீரண‌மாவதை இது தாமதப்படுத்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயராமல் சீராக இருக்கவும் உதவுகிறது. எனவே இது நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்.

உணவுப் பாதையில் கொலஸ்ட்ரால் கிரகிப்பும் குறைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. மேலும் நூறு கிராம் பச்சை கொத்தவரையில் 49 மி.கி. வைட்டமின் சியும், 1.08 கிராம் இரும்புச் சத்தும், கால்சியம் 1.30 மி.கிராமும், பாஸ்பரஸ் 57 மி.கிராமும் நிறைந்துள்ளன.

பயறு வகைப் பயிர் என்பதால் புரதச் சத்து மிகுந்துள்ளது. கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் மிகக் குறைவாகவே உள்ளது. சிறந்த‌ மலமிலக்கியாக செயல்பட்டு குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.

காகிதத் தொழிற்சாலைகளில் பேப்பர் கூழுடன் கொத்தவரை ஜெல்லைக் கலந்து பேப்பருக்கு பிரிண்டிங் செய்வதற்கு ஏற்றவாறு அடர்த்தியான மேற்பரப்பை உருவாக்குகிறார்கள்.

மண்ணிலிருந்து வெட்டப்படும் தாதுக்களைப் பிரித்தெடுக்கவும், வெடிமருந்து தொழிற்சாலைகளிலும் கொத்தவரை பயன்படுகிறது. காய்கறிப்பயிராகவும், தீவனப் பயிராகவும். பசுந்தாளுரப் பயிராகவும் பயன்படுவதோடு, இத்தாவரத்தின் வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் என்னும் பாக்டீரியவானது காற்றில் உள்ள நைட்ரஜனைக் கவர்ந்து மண்ணை வளப்படுத்துகின்றது.

கொத்தவரையை காய்கறியாக விற்பதைவிட முற்றவிட்டு விதைகளை பிரித்தெடுத்து விற்பது இலாபகரமானதாக உள்ளது. உணவு பதப்படுத்தும் தொழிலிலும், சாஸ், கெட்சப் தயாரிப்பிலும் கொத்தவரை விதை பயன்படுத்தப்படுகிறது.

கொத்தவரை சாகுபடி தொழில் நுட்பம்

பொதுவாக காய்கறி பயிர்களில் தற்பொழுது கொத்தவரை சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வருகின்றனர்

குறைந்த தண்ணீரிலேயே கொத்தவரை வந்துவிடும் குறைந்த நாட்களிலேயே மகசூல் கொடுக்கக் கூடியது 45 நாட்களிலேயே காய் எடுக்கலாம்

நடவு செய்த 20 நாட்களில் பூ பூக்க தொடங்கிவிடும் ஆரம் கிளை முதல் நுனி வரை அடுக்கடுக்காக காய்கள் வந்து கொண்டே இருக்கும்.

கொத்தவரை சாகுபடி ரகம் இரண்டு உள்ளது பூஜா, லட்சுமி இரண்டுமே நன்றாக வரக்கூடியது

ஆரம்பத்தில் பல கிளைகள் வந்தாலும் நாம நேராக போகக்கூடிய தண்டுபாகத்தை மட்டும் விட்டுவிட்டு பக்க கிளைகளை அகற்றி விடவேண்டும்

நடவு செய்தவுடன் விதை முளைப்பதற்காக உயிர் தண்ணீரும் மற்றும் 5 நாட்கள் கழித்து ஒரு தண்ணீரும் பாய்ச்சனும்.

ஆரம்ப முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தாவர இலைச்சாறு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து அடிக்கலாம் பொது கொத்தவரையில் நல்ல லாபம் கிடைக்கும்..

கொத்தவரைச் செடியைப் பயிர்செய்ய தண்ணீர் தேங்காத மணல் கலந்த தோட்டமண்
ஏற்றது. உவர் நீர், உவர் மண்ணிலும் வளர்வது இதனுடைய சிறப்பாகும். வெப்பமான காலநிலையில் இதிலிருந்து அதிக மகசூலைப் பெறலாம். பிப்ரவரி முதல் ஜுலை வரை விதைப்புக்குரிய‌ பருவம் ஆகும்.

ஒன்றை அடி இடைவெளியில் பயிர்கள் அமைத்து அரை அடி இடைவெளியில் விதைகளை ஊன்றலாம். ஒரு ஏக்கரில் பயிர் செய்ய நான்கு கிலோ விதைகள் போதுமானது. இதற்கு வாரம் ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும்.

விவசாயிகள் குறைந்த தண்ணீர், அதிக பணப்பயன் தரும் கொத்தவரையை வளர்த்துப் பயன்பெறலாம்.

கொத்தவரங்காய் வற்றல்  செய்யும் முறைக்கு இந்த லிங்க் கை பார்க்கவும்.

மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..


1 comment:

எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.